ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லை : சிறீதரன் எம்.பி அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது, தமிழர் தரப்புக்கள் தனித்தனியே போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அதில் தலைமைத்துவம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முதல் தடவை நான், கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் எங்களுடைய இல்லத்திலே கூடி கதைத்திருந்தோம்.
பின்னர் நாடாளுமன்றத்தில் நானும், கஜேந்திரகுமாரும், செல்வமும் உரையாடியிருந்தோம். இதன்போது ஒரு பேச்சுவார்த்தைக்கான சிறிய விடயங்களை பேசியிருந்தோம்.
எனக்கு வாக்களிப்பதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்தவும் ஏனைய கட்சிகளை ஒன்றிணைக்கவும் எனக்கு ஒரு ஆணை தாருங்கள் என கடந்த தேர்தலின் போது மக்களிடம் கேட்டிருந்தேன்.
மக்கள் எனக்கு அந்த ஆணையை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணையை எதிர்த்தவர்களை மக்கள் நிராகரித்துமுள்ளார்கள். இப்பொழுதும் நானும் எங்களுடைய மக்களும் விரும்புவது நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கின்றோம் என்ற செய்தியையே.
அது ஒரு நீண்டகால விருப்பமாக இருக்கின்ற நிலையில் ஊடகவியலாளர்களான உங்களுக்கும் அதிகமான விருப்பம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
அதாவது 2001 ஆம் ஆண்டிலே தென்தமிழீழ ஊடகவியலாளர்கள் மற்றும் கிழக்கிலங்கை ஊடகவியலாளர்களால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
உயிரோடு இருக்கின்ற இரா துரைரட்ணம், உண்மையின் தரிசனம் செய்கின்ற நிராஜ் டேவிட் மற்றும் மாமனிதர் நடேசன், மாமனிதர் தராகி சிவராம், அரியநேத்திரன் ஆகியோர் இதற்கு மிகவும் பங்களித்தவர்கள்.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)