குறைக்கப்படாத மின் கட்டணம்: அநுர அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம்
மின்சார கட்டணத்தை குறைக்காமல், தற்போதுள்ள கட்டணத்தை அடுத்த 6 மாதங்களுக்கும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஒக்டோபர் மாத இறுதியில் முன்வைக்கப்படும் திருத்தத்தின் மூலம் மின்சாரக் கட்டணத்தை 6 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தும் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மின்சார சபையின் நிகர லாபம்
மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடியும் என தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது மிகத் தெளிவாக தெரிவித்திருந்த பின்னணியில், மின் கட்டணத்தை திருத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்திற்குள் மின்சார சபையின் நிகர லாபம் 136 பில்லியனைத் தாண்டியுள்ள பின்னணியிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கோரிக்கை
இதேவேளை, கடந்த பல வாரங்களாக, நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், தினசரி நீர் மின் உற்பத்தி 5500 மெகாவாட் மணிநேரத்தை தாண்டியுள்ளதுடன், எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தி 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.
இதன்படி, மின்சார சபை 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியிருப்பதால், மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்குமாறு கோரி, சமகி கூட்டுத் தொழிற்சங்கமும் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |