காவல்துறை மா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களிடம் இருந்து பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அசமந்த போக்குக்காட்டிய உத்தியோகத்தர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்துமாறு, காலி பிரதான நீதவான் இசுரு நெட்டிகுமார உத்தரவிட்டுள்ளார்.
காலி உனவடுனவில் உள்ள சுற்றுலா விடுதியில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரைணகளின் போது காவல்துறை உத்தியோகத்தர்கள் சாட்சிகளின் மீது முறையற்ற விசாரணைகளை முன்னெடுத்ததை அடிப்படையாகக் கொண்டே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டில் கவல்துறை மா அதிபர் மற்றும் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாணயங்களை திருடிய குற்றச்சாட்டில்
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சுமார் 6 மில்லியன் இற்கும் அதிகமான வெளிநாட்டு நாணயங்களை திருடிய குற்றச்சாட்டில் காலி உனவடுன பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வழங்கிய முறைப்பாடுகளினை அடிப்படையாகக் கொண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் உனவடுன காவல் துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில், குறித்த இரண்டு சுற்றுலா விடுதிகளில் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் விடுதியின் கணக்காளர் ஆகியோரை இந்த வருடம் ஜனவரி மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில் திருட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான விடுதியின் உரிமையாளரை கைது செய்ய வேண்டாம் என்று காவல்துறை மா அதிபர் மற்றும் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக உனவடுன சுற்றுலா காவல்துறையின் பொறுப்பதிகாரி இந்த ஆண்டு மார்ச் மாதம் காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது
காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றாததன் காரணத்தால் OIC மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறை உள்ளக விசாரணையைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை (19) காலி பிரதான நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காவல்துறைமா அதிபர் மற்றும் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என சட்டமா அதிபரிடம் ஆலோசிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு மற்றும் உதவிச் சட்டத்தின் 08 வது பிரிவின் விதிகளின்படி, இத்தைகைய குற்றச் செயல் நடந்தால், உயர் நீதிமன்றத்தின் முன் குற்றப்பத்திரிகையை முன்வைப்பது சட்டமா அதிபரின் கடமையாகும் என நீதவான் தெரிவித்தார்.
தவறுகள் ஏற்பட்டுள்ளமை தெரிகின்றது
இதுவரை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சிகளின் படி விசாரணையில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது என நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் கீழ் யாராக இருந்தாலும் தவறு செய்துள்ளார்களா என்பதை ஆராய்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் கூறியிருந்தார்.
எனவே, உனவடுன சுற்றுலா காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் அவரது உத்தரவின் கீழ் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்ட உள்ளக விசாரணையின் மீதான இடைநிறுத்த உத்தரவை மேலும் நீடிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.