மேலும் 51 மின்சார சபை ஊழியர்கள் பணி இடைநீக்கம்
அண்மையில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மின் பாவனையாளர்களுக்கு இடையூறு
இந்தநிலையில், இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் நேற்று (19) சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மின் கட்டணங்களை செலுத்துவதற்காக வருகை தந்திருந்த மின் பாவனையாளர்களுக்கு இடையூறு விளைவித்திருந்த, 15 ஊழியர்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இடையூறு விளைவித்த ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து, உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |