அல்வாய் படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்
வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட 'லிபரேசன் ஒப்பரேசன்' இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெற்ற அல்வாய் படுகொலை நிகழ்வின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி - மாலைசந்தை மைக்கல் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
மைக்கல் விளையாட்டு கழகம், மைக்கல் நேசக்கரம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடத்தப்பட்ட பேராசிரியர் கொலை : நீர்நிலையில் வீசப்பட்டது உடல்: பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
மலர் அஞ்சலி
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K Shivajilingam) ஈகைச்சுடரினை ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மைக்கல் விளையாட்டுக்கழகத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கர வண்டி, உலருணவுப் பொருட்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
நூறுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை
1987 மே 26 - 31வரையான காலப்பகுதியில் 'லிபரேசன் ஒப்பரேசன்' இராணுவ நடவடிக்கையின் போது ஆலயங்கள், பாடசாலைகளில் சென்று பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு இராணுவத்தினரால் உலங்குவானூர்தி மூலம் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டன.

இதையடுத்து வடமராட்சி பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் ஆலய சூழலிலும் அடைக்கலமடைந்திருந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் நூறுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்
அத்துடன் வடமராட்சி பகுதியெங்கும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு, எறிகணைத் தாக்குதல், கையெறிகுண்டுத் தாக்குதல்களில் சிக்கி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |