80 கோடி ரூபாய் பொதுப்பணம் கொள்ளை...! நாமல் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு
நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி முறைகேடுகள் காரணமாக 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான பொதுப்பணம் இழக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிதி முறைகேடுகள் குறித்து கடந்த ஜனவரி மாதமே நிதியமைச்சரால் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக பணம்
80 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் திருடப்பட்டுள்ளது ஆனால் ஜனாதிபதி, நிதிச் செயலாளர், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி என அனைவரும் இது குறித்து மௌனம் காப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நாணய மாற்று விகிதத்தின்படி கணக்கிட்டால் இந்த இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தனது மேற்பார்வை கடமைகளில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரச நிறுவனங்களுக்குள் பொறுப்புக்கூறல் என்பது இல்லாதொழிந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான நிதி முறைகேடுகளால் பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிக் குரல்
உண்மையான குற்றவாளிகள் விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக எதிர்க்கட்சிக் குரல்களை அடக்குவதிலேயே அரசாங்கம் குறியாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடருந்து நவீனமயமாக்கல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம், வெறும் அரசியல் மேடைப் பேச்சுக்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாக விமர்சித்துள்ளார்.

பிரிவினைவாதத்திற்கு இந்த நாட்டில் இடமில்லை என வலியுறுத்திய அவர், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பான விடயங்களில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் அரசியல் மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில் நாமல் ராஜபக்சவின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |