அம்பிட்டிய தேரரின் செயற்பாடு: அஸ்கிரிய பீடம் விடுத்த வேண்டுகோள்
பௌத்த மதகுருமாரின் நடத்தைகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர் வடக்கு - கிழக்கு விவகாரங்களை கையாள்வதில் அரசாங்கம் உணர்வு பூர்வமாகவும் பக்கச்சார்பற்ற விதத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என அஸ்கிரிய பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மூன்று தசாப்த மோதல்களின் பின்னர், வடக்கு - கிழக்கில் வசிக்கும் மக்களின் குரல்களை, அதிகாரிகளும் அரசாங்கமும் உரிய முறையில் செவிமடுக்கவில்லை என அஸ்கிரிய பீடத்தின் மெதகம தம்மானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஒரு பௌத்த மதகுருவின் நடத்தையை அடிப்படையாக கொண்டு நிலைமையை தவறாக அர்த்தப்படுத்த வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்து, முஸ்லிம் வணக்கஸ்த்தலங்களை அபகரிப்பதற்கு உதவும் தொல்பொருள் திணைக்களம்: சுட்டிக்காட்டும் அமெரிக்க ஆணைக்குழு
பிரச்சனைக்கான வேர்கள்
அம்பிட்டிய சுமணரத்தன தேரரின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாத போதிலும், அவரும் அவரது சமூகத்தினரும் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள் காரணமாக அவர் அவ்வாறு நடந்து கொள்வதாகவும் மெதகம தம்மானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையில் அம்பிட்டிய தேரரும் அவரது சமூகத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் தாம் தனிப்பட்ட ரீதியில் அறிந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் இனப்பிரச்சனைகள் காரணமாக சிலருக்கு அங்கு நிரந்தரமான வதிவிடம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள மெதகம தம்மானந்த தேரர், அரசாங்கங்கள் இதனை அலட்சியம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயத்தை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து, பிரச்சனைக்கான வேர்கள் என்னவென்பதை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதனை தொடர்ந்து, உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.