திடீரென தீப்பிடித்து எரிந்த விமானத்தின் டயர் : அலறியடித்துக்கொண்டு ஓடிய பயணிகள்
அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) விமானத்தின் டயர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை (26.07.2025) மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மியாமிக்கு புறப்படவிருந்த இந்த விமானம் புறப்படுவதற்கு முன்பே உடனடியாக நிறுத்தப்பட்டது.
வெளியான காணொளி
விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் மொத்தம் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், விமானத்தில் இருந்து புகை வெளியேறுவதை காண முடிகிறது.
பயணிகள் அவசர கால வழிகளை பயன்படுத்தி விமானத்தை விட்டு வெளியேறுகின்றனர்.
மாற்று விமானம் ஏற்பாடு
இந்த நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
“அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்“ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்த பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதாக விமான நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
