சீன அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமெரிக்கா
சீன ஆதரவுடன் செயற்படும் அச்சுறுத்தல் குழுவான APT31-க்கு எதிராக அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.
குறித்த குழுவானது, அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், பல்வேறு பொருளாதார பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதன் அதிகாரிகளை குறிவைத்துள்ளதாக தெரியவந்ததையடுத்து அமெரிக்கா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதன்படி, சீனாவை சேர்ந்த நி காபின், வெங் மிங், செங் ஃபெங், பெங் யாவோன், சன் சியோஹூய், சியாங் வாங் மற்றும் ஜாவோ குவாங்சாங் ஆகிய கணனி தரவுத் திருடர்கள்(hackers) மீது, அமெரிக்காவிற்கு எதிரான குற்றத்தை செய்ய சதி செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு
அதேவேளை, ஜாவோ, நி மற்றும் வுஹான் ஷியாருயிஷி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உட்கட்டமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலைக் கொடுக்கும் இணைய நடவடிக்கைகளை கண்காணிக்க அமெரிக்க அனுமதியளித்துள்ளது.
மேலும், சைபர் கிரைம் மூலம் தீங்கிழைக்கும் கும்பல் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
சீன அரசின் உதவியுடன் செயல்படும் இந்த குழு, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் அரசு துறைகள் மற்றும் அமெரிக்க வணிகங்களின் அறிவுசார் சொத்து மற்றும் வர்த்தக ரகசியங்களை குறிவைத்திருப்பதாகவும், அவ்வாறு செய்பவர்களின் நடவடிக்கையை அமெரிக்கா முறியடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீனாவின் கணனி தரவுத் திருடர்களால் (hackers) அரசியல்வாதிகள் குறிவைக்கப்பட்டுள்ள விடயத்தை குறிப்பிட்டு அவர்களை எச்சரிக்கவுள்ளதாக பிரித்தானியாவின் துணைப் பிரதமர் ஒலிவர் டவுடன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |