எந்த உள் நோக்கமும் இல்லை - இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவித்தல்
எவ்வித நிபந்தனைகளும் இன்றி இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் 15 லட்சம் மொடர்னா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதில் எவ்வித உள்நோக்கமோ நிபந்தனைகளோ கிடையாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கொவேக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி தடுப்பூசிகளே இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசிகள் உயிர் காக்க உதவும் எனவும், நோய்த் தொற்றை ஒழிக்க உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் நீண்ட காலமாக நிலவி வரும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த தடுப்பூசி உதவி வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகளை வழங்கும் போது எவ்வித வேறு நோக்கங்களும் கிடையாது எனவும் மக்களின் உயிர் காப்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பதினைந்து லட்சம் மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் அவர் இந்தவிடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.