மீண்டும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்! ஆயுதக்குழுக்களை எச்சரிக்கும் அமெரிக்கா
அமெரிக்க இராணுவ நிலைகள் மீது இனியும் ஈரான் ஆதரவுப் படையினர் தாக்குதல்களை நடத்தினால் அதற்கு உடனடியாக தக்க பதிலடி வழங்கப்படும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
சிரியாவிலும், ஈராக்கிலும் இருக்கும் ஈரான் ஆதரவுப் படையிரும், யேமனின் ஹவுதி கிளா்ச்சியாளா்களும் அமெரிக்க இராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்துவற்கான வாய்ப்பு இருப்பதனால் அத்தகைய தாக்குதல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க தளபதிகள் தங்களைத் தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு அமெரிக்க இராணுவ நிலைகளில் சுமாா் 160 முறை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடுமையான தாக்குதல்
போரில் ஹமாஸுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாகவே ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள அமெரிக்காவின் இராணுவ நிலைகளைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், தங்கள் இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினா் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த வாரத்தில் நிகழ்த்தப்பட்டதைப் போல் அவா்கள் மீது மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல் நிகழ்த்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
துரிதமாகக் கிடைக்கும்
எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலையும் எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனவே, தனது ஆதரவுப் படையைக் கொண்டு மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் சிந்தித்தால், அதற்கும் கடுமையான பதிலடி மிகத் துரிதமாகக் கிடைக்கும் என்பதை அந்த நாடு புரிந்துகொள்ளவேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |