ரணிலுக்கு அமெரிக்க தூதுவரிடம் இருந்து வந்த பாராட்டு!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய நெருக்கடி குறித்து நாட்டுமக்களிடம் வெளிப்படையாகப் பேசுகின்றார், இவ்வாறு எதிர்வருங்காலங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பேசுவது வரவேற்கத்தக்கதாகும் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நெருக்கடி குறித்து அண்மையில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடினமானதொரு சூழ்நிலையில் இலங்கை
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "இலங்கை தற்போது கடினமானதொரு சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றது. அண்மையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியடைச்செய்தது.
பொதுமக்களுக்கு எதிராகவோ, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவோ அல்லது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் வகையிலேயே கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதவையாகும்.
மாற்றமொன்றைக் கோரும் மக்கள்
இப்போது நாட்டு மக்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றைக் கோருகின்றார்கள். இதுகுறித்து அண்மையகாலத்தில் ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு பிரதிநிதிகளுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின்போது அவர்களனைவரும் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள்.
இருப்பினும் நிலைபேறானதும், ஸ்திரமானதுமான அரசியல் கட்டமைப்பையும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையுமே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை நாம் கூறவிரும்புகின்றோம்.
இலங்கையுடனான அமெரிக்காவின் நல்லுறவு
இலங்கையுடன் அமெரிக்கா நீண்டகாலமாக நல்லுறவைப் பேணிவருவதுடன், மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு, கல்விசார் தொடர்பு, வணிகம்சார் தொடர்பு உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைசார்ந்த தொடர்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அதுவே எமது இலக்காக இருப்பதுடன், இலங்கையின் வெற்றியை எமது வெற்றியாகப் பார்க்கின்றோம். ஆகவே இலங்கை நிறைபேறானதும், வெற்றிகரமானதுமான ஜனநாயக நாடாகத் திகழவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.
அந்தவகையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதிக்கட்டமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள், பொருளாதார மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட தொடக்க நடவடிக்கைகள் திருப்தியளிப்பவையாக உள்ளன" எனக் குறிப்பிட்டார்.
