வீரம் விளைந்த மட்டக்களப்பாருக்கு ஏன் இந்த நிலை
ஒருகாலம் இருந்தது. மட்டக்களப்பு இளைஞர்களின் வீரத்தை எல்லோருமாக சேர்ந்து வாய்பொத்தி வேடிக்கை பார்த்த காலம் அது.
ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் கூட சிங்கள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக முதன் முதலில் துவக்கெடுத்து துரத்தியவர்களும் மட்டக்களப்பு மக்களே. இது 1950 களின் இறுதிப்பகுதியில் நிகழ்ந்த விடயம்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் தான் தமிழீழ போராட்ட களங்களில் பல வெற்றிகளை பெற்றுத்தந்தவர்கள் மட்டக்களப்பின் ஜெயந்தன் படையணி போராளிகள். அவர்களின் வருகை எதிர் தரப்பை அடிவயிறு வரை கலங்க வைக்காத நாட்களே இல்லை எனலாம்.
இப்படியாக வீரத்தின் விளைநிலமாக வீரதீரத்தின் அடையாளமாக பேசப்பட்ட மட்டக்களப்பாரை கருணா என்ற தனிமனிதரின் துரோகச்செயல் ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மக்களின் மீது ஒரு கறையை ஏற்படுத்தியிருந்தது.
கேட்க யாருமில்லை
இது எல்லாம் இன்றும் நாங்கள் மறந்துபோகவேண்டிய கசப்பான உண்மை.
இப்படியாக, இருந்த அந்த மக்கள் மீது எடுத்தவர் எல்லாம் கை வைக்க நினைப்பதும், இரத்த ஆறு ஓடும் என்று சொல்லுவதும், கோவிலை இடித்து சந்தை கட்டுவதும், தலையை வெட்டி கையில் கொடுப்பேன் என்பதுமாக தாயில்லாப்பிள்ளையை கண்டவர் எல்லாம் தலையில் குட்டி விளையாடுவது போல நடந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலமிருந்தது - எமக்கு எங்கள் காவல்தெய்வங்களாக எங்கள் இளைஞர்கள் இருந்தார்கள். நாங்கள் நிம்மதியாய் உறங்க அவர்கள் இராப்பகலாக காவலரன்களில் காவலிருந்தார்கள். அது போல ஒரு தலைவன் இருந்தான். அவன் காலத்தில் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இன்னொரு ஈழத்தமிழன் மீது கை வைக்க ஒவ்வொருவரும் பயந்துகொண்டார்கள்.
அவர் பெயர் சொன்னால் பெட்டிப்பாம்பாக அடங்கிக்கிடந்தார்கள். ஆனால் இன்று பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவது போல,
காவிக்குள் மறைந்திருந்த பிக்கு தொடங்கி காத்தான் குடி அதிபர் வரை தமிழர்களின் நிலங்களை அபகரிப்பது, உடமைகளை ஆக்கிரமிப்பது, உரிமைகளை பறிப்பது என தங்கள் விருப்பத்துக்கு ஆடிக்கொள்கிறர்கள்.
நேற்று ஒட்டுமொத்த தமிழர்களின் தலைகளையும் மட்டக்களப்பில் வெட்டுவேன் என்று கூறிய அம்பிட்டிய தேரரை கேட்கக்கூட யாருமில்லை.
பேருக்கு ஆயிரம் கட்சிகளும் அடியாட்களும் அரசாங்க அமைச்சர்களும் நூறு அமைப்புகளும். ஆனால் இவரின் அராஜகங்களை கேட்க ஆட்களில்லை.
மேய்ச்சல்தரைகளை பிடிக்கிறார்கள், மாடுகளைச் சுடுகிறார்கள், மனிதர்களையும் சுட்டார்கள் இப்படிப்போனால் கைபிடி மண்ணும் மிஞ்சாது.
மட்டக்களப்பு மக்களே
எங்கே உங்கள் கிழக்கின் மீட்பர்கள்? எங்கே உங்கள் மட்டக்களப்பு மண்டேலா?
பிள்ளை கடத்துவதும் ஆட்பிடிப்பும் காட்டிக் கொடுப்பும் தான் கிழக்கின் விடிவா ?
தனிமனித ஆசைக்கு ஒரு இனப்போராட்டத்தையே விலைபேசி விற்ற அந்த மாபாதகர்கள் எங்கே?
தேசக்கனவோடு வானிலும் மண்ணிலும் கடலிலும் வெடித்துச் சிதறிய அந்த மாவீரத்தெய்வங்களின் சாபத்தால் தான் இப்படி எல்லாம் நடக்கிறதா?
தலைவன் இருந்திருந்தால் கனவிலும் இப்படி ஏதாவது நிகழ்ந்திருக்குமா ?