இலங்கையின் பால் பண்ணைகளிலும் தடம் பதிக்க தயாராகிறது இந்தியா
தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 31 பண்ணைகளை இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஆய்வு செய்து முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகளை அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் திரவ பால் தொழிற் துறையை ஊக்குவிப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பண்ணை அபிவிருத்தி
மேலும், இந்த ஆய்வின் போது அமுல் ஆய்வு குழு, நிலப் பயன்பாடு, ஆண்டு உற்பத்தி, விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் பண்ணைகள் முழுவதும் பயன்படுத்தப்படாத நிலம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பண்ணை அபிவிருத்திக்கு புதிய திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை ஒப்பந்தம்
இதற்கிடையே, முன்மொழியப்பட்ட குத்தகை ஒப்பந்தம் உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து எதிர்ப்பினை சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பரந்த பால் உற்பத்தியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தி கடந்த சில மாதங்களாக பல போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.