யாழில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு சேதனப் பசளையினை வழங்க முடியும் - அங்கஜன் நம்பிக்கை
யாழ். மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பெரும்போகத்துக்கு தேவையான சேதனப்பசளையினை வழங்க முடியும் என தாம் நம்புவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம், தேசிய மேம்பாட்டுக்கான ஊடக மையம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படும் சேதனப்பசளை உற்பத்தி செயற்றிட்டத்தில் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சேதனப்பசளை உற்பத்திகள் அம்மாவட்டத்துக்கான காலபோக உரத்தேவையினைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் வழங்கிய போதே இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், யாழில் பல கட்டங்களாக சேதனப்பசளை உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவித்து வருவதாகவும், அதன் மூலம் குறித்த மாவட்டத்துக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஒருவேளை தமது உற்பத்தியானது தமது தேவையினை நிறைவுசெய்ய முடியாத பட்சத்தில், ஏனைய மாவட்டடங்களில் இருந்து யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரத்தினை கொள்வனவு செய்து வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் யாழ் மாவட்டங்களில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு உரங்களை பகிர்ந்தளிக்க கூடிய உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நம்பிக்கை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள முடக்கம், முடக்கத்தினை அமுல்படுத்துவதற்கான அழுத்தம் மற்றும் நாடளாவிய முடக்கத்தினை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதன்போது கருத்து வெளியிட்டார்.
இதுகுறித்து தெரிவித்த அவர்,
"ஓர் முடக்கம் என்பது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கான ஓர் காரணியாக அமைந்துவிடுகின்றது. உலகளாவிய ரீதியாக ஏற்படுத்தப்பட்ட முடக்கங்கள் பண வீக்கத்துக்கு காரணமாக அமைந்துள்ளன.
அது மட்டுமல்லாமல் மிக நீண்ட காலத்துக்கு முன்னர் ஏற்பட்டிருந்த ஓர் பொருளாதார சரிவை சந்திக்கக்கூடிய வாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளதாக எதிர்வுகூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் முடக்கம் ஒன்றினை அமுல்படுத்தாமல் இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகைகள் குறித்து அரசாங்கம் சிந்திக்கின்றது.
அத்துடன் நாளாந்த வருமானம் பெரும் தொழிலாளர்களின் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.
இந்தப் பின்னணியிலும் மத குருக்கள் உள்ளிட்ட பலரது வேண்டுகோளுக்கு இணங்க முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இத்தனை காலமும் அரசாங்கம் - எதிர்க்கட்சி என்ற ரீதியில் பல முரண்பாடுகளை கொண்டிருந்தாலும், மக்களின் எதிர்காலம் மற்றும் சுகாதார பாதுகாப்புக்கான சவால்களை எதிர்கொள்ளும் இக்காலப்பகுதியில், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது." என தெரிவித்தார்.