பிரபல தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனை சந்தித்தார் அண்ணாமலை!
இலங்கைக்கு விஜயம் கொண்டுள்ள பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களை சந்தித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்பாணத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அண்ணாமலை அவர்களின் அழைப்பின் பெயரில் அந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்ற பல்வேறு அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் சம்பந்தமாக தமது கலந்துரையாடல்கள் அமைந்திருந்ததாகவும் தெரிவித்த கந்தையா பாஸ்கரன், ஈழத்தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க பா.ஜ.க. திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்ததாகவும் கூறினார்.
குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிக அக்கறை கொண்டுள்ளதாக அண்ணாமலை தன்னிடம் கூறியதாகவும் பாஸ்கரன் தெரிவித்தார்.
யாழ்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் அங்குரார்பண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் லோ. முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை போன்றோர் யாழ்ப்பாணம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
