புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் இதுவரை நாட்டிற்கு எதிரான கருத்தை கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் தற்போது நாட்டின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகவும், அவர்களின் கருத்தை நிராகரிக்காமல் கலந்துரையாடி பொதுவான கருத்துக்கு வருவதே முக்கியம் என முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகரும், நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய, நேற்று (02) மல்வத்து பீடத்தின் மாநாயக்க தேரர்களை தரிசித்த போது, இதனை வலியுறுத்தினார், மேலும் தெரிவிக்கையில்,
நம்பிக்கையின்றி வாழும் சிங்கள,தமிழ் சமுகங்கள்
இந்த நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் இன்னமும் ஒருவரையொருவர் நம்பிக்கையின்றி வாழ்ந்து வருவதாகவும் குறுகிய மனப்பான்மை கொண்ட குழுக்கள் இரு சமூகங்களிலும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட மல்வத்து மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர்,
வாக்குறுதிகளை மறந்த அரசியல்வாதிகள்
மல்வத்து பீடத்தின் மகாநாயக்கராக தாம் பதவியேற்று 20 வருட காலப்பகுதியில் நிறைவேற்று அதிபர் பதவியை நீக்குவது தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் தமக்கு நினைவுக்கு வந்ததாகவும், அந்த வாக்குறுதிகளை அந்த அரசியல்வாதிகள் அனைவரும் மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அந்த பதவியை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளித்த தலைவர்கள் அனைவரும்அதிபர் பதவிக்கு வந்த பின்னர் மறந்துவிடுவதாகவும், எதிர்வரும் அதிபர் தேர்தலிலும் இந்த விடயம் முன்னுக்கு கொண்டு வரப்படும் எனவும், அதன் பின்னர் அந்த விடயம் வழக்கம் போல் நசுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டில் புத்தாண்டுக்குப் பின்னர் ஜனரஞ்சக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என மகாநாயக்க தேரர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |