இராணுவத்திற்காக வீதியில் இறங்கிய இளைஞர் - யுவதிகள் : இந்தியாவில் பரபரப்பு
இந்திய (India) இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்கு தயார் என தெரிவித்து சண்டிகரில் இளைஞர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்தே இவ்வாறு இளைஞர்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள்
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.
இதில், ஒன்பது பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடுத்து வருகின்ற நிலையில், இந்திய இராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட இராணுவ ரிசர்வ் படையாக டெரிடோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய இராணுவம் செயல்படுகின்றது.
இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிராந்திய இராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முழு அதிகாரம்
இதற்கான முழு அதிகாரமும் இந்திய இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய இராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் நேற்று (09) இரவு தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இவ்வாறு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பதிவில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் இன்று காலை பத்து மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவ்வாறு இளைஞர்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான பயிற்சி முகாம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
