மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி
கொழும்பு - குருநாகல் வீதியின் புஹுரிய சந்தியில் பாரவூர்தி ஒன்று மோதுண்டதில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் வாகனங்களை நிறுத்தி நேற்றிரவு சோதனையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கந்தளாயில் இருந்து கடுவளை நோக்கி மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று காவல்துறை உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மகிழுந்து ஒன்று மோதியதில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
