கோட்டாபய அரசுக்கு மற்றுமொரு தலையிடி - வெளிவரவுள்ள கூட்டறிக்கை
இலங்கை ஆயர் பேரவைக்கும் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (29) காலை கொழும்பு 08, Balcom Place இல் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஈஸ்டர் தாக்குதல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டது.
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்(Archbishop Malcolm Cardinal Ranjith), முதலில் கத்தோலிக்க ஆயர்களையும், உதவி ஆயர்களையும் சந்தித்து பின்னர் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். இதில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி(Hector Appuhamy), காவிந்த ஜயவர்தன (Kavinda Jayawardena), சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adikalanathan)ஆகியோரும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா(Nimal Lansa)மட்டும் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாததால் ஆயர்கள் பேரவை ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்காலத்தில் கூட்டறிக்கை வெளியிடப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.