கொரோனாவை அடுத்து மிரட்டும் மற்றுமொரு நோய் -பெருமளவு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலும் தீவிரமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 24 சிறுவர்கள் தற்போது லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய(Dr. G. Wijesuriya) தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுதிகளில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் டெங்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உடனடியாக வைத்திய சிகிச்சைக்கு அனுப்புமாறு வைத்தியசாலை பணிப்பாளர் கோருகின்றார்.
இதேவேளை, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 16,174 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோயாளிகளில் 47.4வீதமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.