ரஷ்ய பிரஜையின் பயிற்சியில் போதைப்பொருள் தயாரிப்பு! தொழிற்சாலை முற்றுகை
மாத்தறை - வெலிகம சல்மல் உயனவில் இயங்கி வந்த இரகசிய ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) தயாரிப்பு நிலையமொன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சோதனையின் போது சுமார் 10 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று நடத்தப்பட்ட விஞ்ஞான பரிசோதனைகள் மூலம், அந்த வீடு ஐஸ் தயாரிப்புக்கான தொழிற்சாலையாக பயன்படுத்தப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
ரஷ்ய பிரஜையின் பயிற்சி
குறித்த வீடானது, நேற்றையதினம் போதைப்பொருள் ரசாயனத்துடன் கைது செய்யப்பட்ட 18 வயது மால்டோவிய இளைஞனை விசாரித்ததில் கண்டறிப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வீட்டை சந்தேகநபரான வெளிநாட்டு இளைஞன் வாடகைக்கு எடுத்திருந்தமையும், முன்னதாக உனவட்டுன்ன பகுதியில் வசித்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், தேவையான இரசாயனங்களை அவர் கொண்டு வந்து அங்கு ஐஸ் தயாரித்து வந்ததும், இந்த உற்பத்தியை ஒருங்கிணைத்தது ஒரு ரஷ்ய பிரஜை என்றும், அவர் குறித்த இளைஞனுக்கு பயிற்சி வழங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது.
பாரிய வலையமைப்பு
இவ்வாறானதொரு பின்னணியில், இவ்வாறு கிராமங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் போல ஐஸ் தயாரிக்கத் தொடங்கினால், நமது நாட்டின் அடுத்த தலைமுறைக்கு எதிர்காலமே இருக்காது என தென் மாகாணத்திற்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெரிய வலையமைப்பை கண்டறிய ஆழ்ந்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றதுடன், ஏற்கனவே சிலர் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் நுணுக்கம் காரணமாக விவரங்கள் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.
இதேவேளை, இது இலங்கையில் கண்டறியப்பட்ட முதல் சம்பவம் அல்ல என்பதுடன், முன்னர் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை – மயுரபுர பகுதிகளில் நடந்த சோதனைகளில் இதே போன்ற ஐஸ் உற்பத்தி மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
