எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு
காலியில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் டீசல் பெறுவதற்காக காலி, தவலம, ஹினிதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனது பாரவூர்திக்கு டீசல் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றுள்ளார்.
அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் காலி, ஹபரகட பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வார இறுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களில் இது ஆறாவது மரணமாகப் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.