வடக்குக்கு நாளை முதல் மழை - பிரதீபராஜா எச்சரிக்கை
நாளை முதல் எதிர்வரும் 27.01.2026 வரை வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இன்று (22.01.2026) வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதிவில் மேலும் குறிப்பிடுகையில், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.
மிதமான மழை
இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக நாளை (23.01.2026) முதல் எதிர்வரும் 27.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்றும் பிற்பகலுக்கு பின்னர் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது
எனவே நாளை முதல் நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும், நெல் உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
குளிரான வானிலை
அதேவேளை தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மாலையில்/ இரவில் நிலவும் குளிரான வானிலைக்கு காரணமான அதிகுறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27.01.2026 வரை சற்று உயர்வடையும் என்பதனால் இன்று முதல் எதிர்வரும் 27.01.2026 வரை குளிர் நிலைமை சற்று சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் 29.01.2026 முதல் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |