மற்றுமொரு தொழிற்சங்கமும் பணிப்பகிஸ்கரிப்பில் குதிக்கிறது -நெருக்கடியில் அரசாங்கம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல்வேறு கேரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு தொழிற்சங்கமும் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி புகையிரத நிலைய அதிபர்களின் இடமாற்றம், ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,எதிர்வரும் 26ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ரயில்வே சமிக்ஞை அமைப்புகளில் உள்ள கோளாறுகளை சரி செய்யவும், பழுதடைந்த ரயில் பெட்டிகளை சரிசெய்யவும் ரயில்வே திணைக்களம் தவறிவிட்டதாகவும் சங்கம் அறிவித்துள்ளது. ரயில்வே அதிகாரிகளுடன் நாங்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். ஆனால் எங்கள் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் வழங்கப்படவில்லை. எனவே, கலந்துரையாடல்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்கு ஒன்றியம் தீர்மானித்துள்ளது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான கசுன் சாமர தெரிவித்தார்.
ரயில்வே திணைக்களத்திலுள்ள குறைபாடுகளால் சுமார் 700 புகையிரத நிலைய அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ரயில்வே திணைக்களம் நீண்ட காலமாக காலதாமதம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளரிடம் பலமுறை புகார் செய்துள்ளதாகவும், இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
புதிய தகவல் தொடர்பு அமைப்பின் கீழ் இயக்கப்படும் ரயில்வே சிக்னல்களை சரிசெய்து நவீனப்படுத்துவது அவசியம். ஆனால் இதுவரை ரயில்வே திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.