கொழும்பில் புரட்சி வெடிக்கும் அபாயம் - அடுத்தடுத்து எச்சரிக்கை மணி
இலங்கையில் பஞ்ச சூழ்நிலையை எதிர்நோக்கும் மக்களால் எதிர்காலத்தில் பாரியதொரு போராட்டம் முன்னெடுக்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் அதிகரிக்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மக்களால் முன்னெடுக்கப்பட்டதை விட மோசமான ஒரு போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்படுமெனவும் வன்முறைகள் நாட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு சர்வதேச நாடுகளிடம் கடன் கோருவது தீர்வாகாது.
நெருக்கடிகளுக்கு தீர்வு
மக்கள் தமது கஷ்டங்களின் நிமித்தம் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கும் போது அவர்களை அடக்க முயற்சிப்பதும் நெருக்கடிகளுக்கு தீர்வாகாது.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் இதுவரை முற்படவில்லை.
இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கும் உணவுப் பொருட்களுக்கும் டொலர் தேவைப்பட்டாலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுபவைகளுக்கு அது தேவை இல்லை.
இலங்கையில் இருக்கும் இயற்கையான மூலிகைகளைக் கொண்டு மருந்து வகைகளை உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்பதோடு இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளை ஊக்குவிக்கவும் அரசாங்கம் தவறியுள்ளது.
அதி உயர் பாதுகாப்பு வலயம்
மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் அரசாங்கத்தினால் உயர்பாதுகாப்பு வலயம் குறித்ததான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் செயலகம், அதிபர் மாளிகை போன்ற இடங்களைத் தவிர்த்து மக்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த முடியாது.
மக்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அமைதிப் போராட்டங்கள் வன்முறையாக மாறும் பட்சத்தில் மாத்திரமே காவல்துறையினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் சட்டத்தை பயன்படுத்த உரிமை உள்ளது” என்றார்.
இதேவேளை, சரத்பொன்சேகா மற்றும் மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் இன்று எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
