மீண்டும் இலங்கைக்கு திருப்பி கொடுக்கப்பட்ட பெறுமதியான தொல்பொருட்கள்!
ஒல்லாந்தரால் கடந்த 1756 ஆம் ஆண்டு கண்டி அரச மாளிகையை தாக்கி அங்கிருந்து சூறையாடப்பட்ட 06 தொல்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ஜேர்மனியிலிருந்து இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-554 மூலம் இன்று(29) காலை 05.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி இராசதானி மன்னனான கீர்த்தி சிறி ராஜசிங்கவின் திருமண வாள், மன்னருக்கு சொந்தமான வெள்ளி கஷ்கொட்டை, மன்னரின் தங்க கத்தி, பீரங்கி மற்றும் இரண்டு பெரிய துப்பாக்கிகள் போன்றனவே இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தொல்பொருட்களை கையளிக்கும் நிகழ்வு
அதேவேளை, குறித்த தொல்பொருட்களை கையளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரால், இந்த தொல்பொருட்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அதனை தேசிய அருங்காட்சியக திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கையளித்தார். இந்த தொல்பொருட்களை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து உட்பட சுமார் இருபது வெளிநாடுகளில் இலங்கையில் இருந்து திருடப்பட்ட தொல்பொருட்கள் பெருமளவிலான கையிருப்பு உள்ளதுடன், இந்தப் பொருட்களும் எதிர்காலத்தில் தீவிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |