யானைப் பசிக்கு சோளம் பொரி போன்றது அநுர அரசின் பாதீடு : சிறிநேசன் எம்.பி
வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றவில்லை எனவும் இருந்த போதிலும் யானைப் பசிக்கு சோளம் பொரி என்ற அடிப்படையில் சில விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
நேற்று (11.11.2025) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் துண்டு விழும் தொகை 6.5 வீதமாக காணப்பட்டது, 2026 ஆம் ஆண்டு பார்க்கும்போது இந்த துண்டுகளும் தொகையானது மொத்த தேசிய உற்பத்தியில் 6.2 வீதமாக குறைவடைந்து இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி
அது மாத்திரமன்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4.8 வீதமாக கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனைவிட வட்டி வீதம் நிதியின் உறுதித் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் 8.3 வீதமாக குறைக்கப்பட்டிருக்கின்றது.
இதனைவிட அரசின் உத்தியோகபூர்வமான ஒதுக்கீடுகளில் 6.0 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்திருக்கிறது. எனவே இந்த விடயங்களை புள்ளி விபரங்கள் இறுதியாக பார்க்கின்ற பொழுது அரசின் செலவினங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. விடயங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது வரவு செலவு திட்டத்தில் ஒரு சாதகமான தன்மை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ஊழலற்ற தேசம் பாதாள உலக அமைப்பினர் இல்லாத தேசம், போதைவஸ்து இல்லாத தேசம், போன்ற எண்ணக் கருக்களின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முன்மொழிவுகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கின்றபோது அனுகூலமான தன்மை இருப்பது போன்று காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கு மக்கள் 30 ஆண்டு காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இன அழிப்புக்கு உள்ளானவர்கள் கைதிகளாக்கப்பட்டவர்கள், இவ்வாறான நிலைமைக்கு உருவாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டு சர்வதேசம் மிகவும் கேவலமான முறையில் பார்க்கக்கூடிய வகையில் யுத்தம் முடிவடைந்து இருக்கிறது. ராயப்பு ஜோசப் அவர்களின் கருத்தின்படி ஒரு இட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுபோல் மிகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சர்வதேச பொறிமுறை
விடுதலைப்புலிகளில் இயக்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தினால் கூறப்பட்ட பொறுப்பு கூறலின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட புதைந்துள்ள உண்மைகளை கண்டறியப்பட வேண்டும்.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரமான நீதியை வழங்க வேண்டும். மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் பாதுகாப்பான ஒரு அரசியல் தீர்வை காண வேண்டும் இந்த மூன்று விடயங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.
யுத்தம் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன இவற்றை உள்நாட்டு பொறிமுறைகூட நாங்கள் செய்து முடிப்போம் என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் நடைமுறைச் செயற்பாட்டில் பார்க்கின்ற பொழுது இந்த 16 ஆண்டுகளில் எதுவும் சாதிக்கப்படவில்லை.

சர்வதேச பொறிமுறையை விரும்பாதவர்கள் உள்நாட்டு முறை மூலமாக நீதியான ஒரு செயற்பாட்டை, தீர்வை, உண்மைகளை கண்டறிகின்ற விடயத்தை இவர்கள் ஒரு மில்லி மீற்றர் கூட நகர்ந்து இருப்பதாக தெரியவில்லை.
வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்குநீதி கிடைத்திருக்கின்றதா நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டிருக்கின்றதா? எனப்படுகின்ற போது அது உண்மையில் மிகவும் வெட்கப்படக்கூடிய விதத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வடக்கு கிழக்கு மக்களின் பார்வையில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை மக்கள் திருப்தி அடையவில்லை எனினும் பொதுவான விடயங்களில் சில நல்ல விடயங்கள் இருக்கின்றனதான்.
எனவே வடகிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் கூடுதலான தடவைகள் புறக்கணிக்கப்பட்ட பிரதேசம் அந்தப் பிரதேசத்திற்கான விசேடமாக அதிகமான நிதி ஒதுக்கீடுகளை செய்யப்பட்டிருக்கின்றதா? என்று பார்த்தால் அவ்வாறு இல்லை.
மகிந்த ராஜபக்சவின் பாணி
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பார்த்தால் கிரான் பாலத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. கித்தூள் உறுகாமம் ஆகிய இரு குளங்களையும் இணைத்து மேற்கொள்ளப்படுகின்ற முந்தானை ஆற்று வேலைத்திட்டத்திற்காக முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
பொண்டுக்கல்சேனை பாலத்திற்கும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வாழச்சேனை கடற்றொழிலாளர் துறைமுகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

மாறாக மாவட்டத்தின் படுவான்கரையும் எழுவாங்கரையை இணைக்கின்ற மண்டூர் குருமன்வெளி ஓடத்துறைக்குரிய பாலம், அம்பிளாந்துறை குருக்கள்மடம், ஓடத்துறைக்குரிய பாலம் கிண்ணையடி மற்றும் சந்திவெளி போன்ற ஆறுகளை ஊடகத்திற்கு செல்வதற்கான பாலங்களை அமைப்பதற்குரிய எந்த ஒரு விடயமும் இதில் சொல்லப்படவில்லை.
எனவே வடக்கு கிழக்கு மக்களின் ஏக்கம் எதிர்பார்ப்பு பெருமூச்சு என்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் திருப்தி அடையக் கூடிய விதத்தில் நிறைவேற்றவில்லை. இருந்த போதிலும் யானை பசிக்கு சோளம் பொரி என்ற அடிப்படையில் சில விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
காட்டு யானைகளின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய செற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்துள்ள தொல்லியல் ஆணைக் குழுவில் அனைவரும் பௌத்த மதத்தை தழுவியவர்களாகவே இருக்கின்றார்கள், இது மகிந்த ராஜபக்சவின் பாணி ஓட்டியதாக அமைந்துள்ளது இதுவும் கண்டிக்கத்தக்க விடயம்” என அவர் இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |