தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் அனுர குமார
புதிய இணைப்பு
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கட்சித் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன் போது, மும்மொழியிலும் வெளியிடப்பட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை, கண்டி மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினரான கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம் தமிழில் மக்கள் மயப்படுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் மக்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்குமிடையிலான உடன்படிக்கை என சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.
மேலும், சிறிலங்கா அரசாங்கத்திலும், அரச நிறுவனங்களிலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது தமிழ் மொழி பரந்தளவில் பயன்படுத்தப்படுமென அந்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு வாய்ப்பு
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தங்கள் சொந்த மொழிகளில் கோரிக்கைகளையும் கடிதங்களையும் அரச நிறுவனங்களில் முன்வைக்க தமிழ் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், அத்துடன் அவற்றுக்கான பதிலும் தமிழ் மொழியிலேயே குறித்த தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட்டு மக்கள் நீதியின் மீது அதிக நம்பிக்கை கொள்ளும் காலம் விரைவில் உருவாக்கப்படும்.
இலங்கையில் தொடர்ந்தும் ஒருவருக்கு எதிரான அரசியல் முறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, இவ்வாறான பின்னணியில் நாட்டில் ஒருபோதும் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.
இந்த அரசியல்முறையை மாற்றி, தேசிய மக்கள் சக்தி சமாதானத்துடனான ஆட்சி முறையை இலங்கையில் முன்னெடுக்கும். இலங்கையில் உள்ள அனைவரும் தத்தமது மதங்களை சுதந்திரமாக பின்பற்றக் கூடிய சுதந்திரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்.
மேலும், விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இலங்கையின் ஆட்சி முறையை மாற்றி, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஆட்சி முறையை இலங்கையில் ஸ்தாபிப்போம்.” என தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இன்று (26) ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ஹோட்டலில் நடைபெறும் நிகழ்விலேயே இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க தயார்! சுரேஸ் பிரேமச்சந்திரன்
தேர்தல் விஞ்ஞாபனம்
இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பல மதத் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), “பல கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்தாலும், அவர்கள் ஆட்சிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முற்றாக அவற்றிற்கு எதிராகவே செயற்படுவதாக தெரிவித்தார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தங்கள் கட்சியின் சமூக ஒப்பந்தத்தை நாட்டு மக்களிடம் முன்வைப்பதாகவும், அதற்கான ஒப்பந்தத்தின்படி தான் நாட்டின் ஆட்சியை நிறைவேற்றுவார்கள்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |