தமிழ் மக்களுக்கான தீர்வு விவகாரம் - அநுரவிற்கு மோடியின் அழுத்தம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தினார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
மூன்று நாள் அரச முறை பயணமாக இந்திய சென்ற ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) நேற்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்தியுள்ளார்
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று (16.12.2024) மாலை புதுடில்லியில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
உண்மையான நீதிக்கு மாகாணங்களின் அவசியம்
இதன்போது 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இருவருக்கும் இடையில் பேசப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல சந்தர்ப்பங்களில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக தேர்தல் காலங்களில் அவர் இது குறித்து கூறியிருந்தார். வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில அவருக்கு ஆதரவு கிடைக்கப்பெற்றது.
தமிழ் மக்கள் தொடர்பிலான விவகாரம் நீண்ட காலமாகப் பேசப்படும் பிரச்சினை. இரு தரப்பு பேச்சுகளில் இந்த விடயங்கள் தொடர்பில் சில விடயங்கள் பேசப்பட்டன.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எடுத்துரைத்ததுடன், இன ஐக்கியம் மற்றும் உண்மையான நீதிக்கு மாகாணங்களின் அவசியம் தொடர்பிலும் அவர் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |