போர்வீரர் நினைவேந்தலில் அநுரவுக்கு எதிராக அவதூறு: வெளியான அறிவிப்பு
தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொள்ள மாட்டார் என்ற செய்தி எதிர்க்கட்சியினரால் புனையப்பட்டது என ஆளும் கட்சி அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் சமிந்த குமார (Chaminda Lalith Kumara) கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரால் புனையப்பட்ட இந்தக் கதையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள்
ஜனாதிபதி அநுர போர்வீரர் நினைவேந்தலில் கலந்து கொள்ளமாட்டார் என வெளியான செய்தியை தொடர்ந்து, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்றையதினம் நடைபெறவுள்ள தேசிய போர்வீரர் நினைவேந்தலில், ஜனாதிபதி கலந்து கொள்ளமாட்டார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கடுமையான எதிர்ப்பு
அதனை தொடர்ந்து, நாமல் ராஜபக்ச, உதயகம்மன்பில உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகளினால் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சமூக ஊடகங்களிலும் கடும் விமர்சனங்கள் உருவாகியிருந்தன.
எனினும், நேற்று பிற்பகல் வேளையில், இன்று(19) நடைபெறவிருக்கும் போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
