பிரித்தானியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உடன்பாடு! பிரெக்சிற்றை தளர்த்தும் திட்டங்கள்
பிரித்தானியக் கடல் எல்லைக்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் (EU) கடற்தொழில் படகுகளை இன்னும் 12 ஆண்டுகளுக்கு அனுமதிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றித்தில் இருந்து பிரித்தானியா (UK) தனது பிரெக்ஸிற் நகர்வின் ஊடாக பிரிந்து சென்ற பின்னர் முதன் முறையாக இன்று இரண்டு தரப்புக்கும் இடையில் ஆரம்பமான உச்சிமாநாட்டின் ஆரம்பக்கட்டத்தில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆட்சியை பிடித்த தொழிற்கட்சி அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவுகளை திட்டமிட்டுவரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வர்த்தக உரிமைகள்
இந்த புதிய உடன்பாட்டின்படி 2038 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தின் இறுதி வரை பிரித்தானிய கடற்பரப்பில் ஐரோப்பிய ஒன்றிய படகுகள் கடற்தொழில் செய்ய முடியும்.
தற்போது உள்ள இந்த உரிமை அடுத்த ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் இந்த புதிய 12 ஆண்டுகால நீடிப்பு எட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய கடல் எல்லைக்குள் ஐரோப்பிய ஒன்றிய படகுகளை அனுமதிக்கு நடைமுறைக்கு பிரதிபலனாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் பிரித்தானிய விவசாயப் பொருட்களுக்கான வர்த்தக உரிமைகள் வழங்கப்படாது என எதிர்பார்க்கபடுகிறது.
இன்று லண்டனில் ஆரம்பமான இந்த மாநாட்டு ஒரு சரணடைதல் மாநாடாக மாறும் என பிரித்தானியாவின் வலதுசாரிக்கட்சிகள் கண்டனம் செய்த நிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பிரெக்சிற் நகர்வு
இதேவேளை இன்றைய உச்சி மாநாட்டின் போது பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 18 க்கும் 30 வயதுக்கும் உட்பட்ட அதன் குடிமக்கள் இரண்டு தரப்பிலும் வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் ஏதுவான வகையில் புதியதொரு உடன்பாடு எட்டப்படலாம் என கருதப்படுகிறது.
பிரெக்சிற் நகர்வுக்கு முன்னர் இரண்டுதரப்பு குடிமக்களும் பிரித்தானியாவில் அல்லது ஒன்றிய நாடுகளில் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி வாழவும் பணிபுரியவும் உரிமை இருந்தது.ஆனால் பிறெக்சிற்குப் பின்னர் அந்த உரித்து முடிவுக்கு வச்த நிலையில் தற்போது இரண்டு தரப்பிலும் 30 வயதுக்குட்பட்ட அதன் குடிமக்களுக்கு இந்த தளர்வை வழங்கும் வகையிலான பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன.
இதேபோலவே பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளில் உள்ள அதன் குடிமக்களுக்காக ஈ-கேற் எனப்படும் முகவர்கள் அற்ற வழியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரித்தானியா ஒன்றியத்திடம் கோரியுள்ளது.
பிரெக்சிற்றுக்குப் பின்னர் பிரித்தானியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஒன்றிய நாடுகளில் எல்லைகளில் ஈ-கேற் பாதைகளைப் பயன்படுத்த முடியாத நடைமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
