ஜே.வி.பியின் சதியால் கொழும்பில் வீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் : சந்திரிக்கா பகிரங்கம்
கொழும்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் முயற்சிகளை தான் முன்னெடுத்தபோது ஜே.வி.பி சார்ந்த ஊடக மிரட்டல்களால் அவை தடைப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் இல்லமொன்றை பெற்றுள்ள நிலையில் அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் தனக்கு மருத்துவச் சிகிச்சைகளை பெறவேண்டியுள்ளதால் தற்போதைய அரச இல்லத்தில் தங்குவதற்கு இரண்டு மாத கால அவகாசம் கோரியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டமை உட்பட சமகால நிலைமைகள் சம்பந்தமாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “1994 முதல் 2005 வரை ஆட்சி செய்த எனக்கு டொரின்டனில் அரச இல்லம் வழங்கப்பட்டது. நான் இந்த இல்லத்திற்கு வரும்போது ஒரு புல்கூட இருக்கவில்லை. நிலம் கூட நடக்க முடியாத அளவில் தான் இருந்தது.
அப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியை அப்போதைய ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரியபோது, அவர்கள் அதனை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்கள். அதன்பின்னர் நான் எனது சொந்த நிதியில் இருந்து 14மில்லியன் ரூபாய் செலவழித்தே புனரமைப்பு பணிகளை முன்னெடுத்தேன்.
தற்போது சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் நான் விழுந்தமையால் இடுப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சையைப் பெற்றுவருகின்றறேன். தினமும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியுள்ளது.
ஆகவே, இந்த இல்லத்தில் ஆயுட்காலம் வரையில் தங்கியிருப்பதற்கான அனுமதியைக்கோரி ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது ரோஸ்மீட் பிளேஸ் வீட்டை விற்ற பிறகு கொழும்பில் எனக்கு வீடு இல்லை. கொழும்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் முயற்சிகளை நான் முன்னெடுத்தபோது ஜே.வி.பிசார்ந்த ஊடக மிரட்டல்களால் அவை தடைப்பட்டன.
விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை
குறிப்பாக வீட்டின் உரிமையாளர்களுடன் உரையாடி அவற்றை வெறுவதற்கான பரிவர்த்தனைகளை முன்னெடுக்க முயன்றபோது அச்செயற்பாடுகளை தடுப்பதற்காக பல்வேறு சாட்டுகள் கூறப்பட்டன.
அதற்கான காரணத்தினை ஆராய்ந்தபோது, ஜே.வி.பி தங்கள் அன்பான ஊடகவியலாளர்களை நியமித்து என்னைப்பற்றி அவதூறு பேசியதாக கேள்விப்பட்டேன்.
இந்த நிலையில் கொழும்பில் பிரத்தியேகமாக தங்குவதற்கான சிறிய இல்லமொன்றை தற்போது பெற்றுக்கொண்டுள்ளேன். அங்கு, புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்படுவதால் அதுவரையில் அரச இல்லத்திலேயே தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளேன்.
பல நாடுகளில், இதை விட பல சலுகைகள் உள்ளன. இந்தியாவில் கூட, சிறந்த சலுகைகள் உள்ளன. ஆனால் அரசாங்கம் அதுபற்றி கவனம் செலுத்தவில்லை. எனது மகன் லண்டனில் இருந்து நாடு திரும்பியிருந்ததோடு சிறிதுகாலம் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்.
அதேநேரம் ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தற்போதைய அரசாங்கத்தால் விசாரணைக்கு உட்படாத ஒரேயொரு நபர் நான் தான். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது வெளிப்படையாகின்றது.
மேலும் அரசாங்கம் நல்லாட்சியை நிலைநாட்டி முன்னெடுப்பதிலும் பார்க்கவும் ஆட்சியை விட பழிவாங்கும் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள். அவர்களுடைய சொந்த அரசாங்கத்தில் ஊழலை எவ்வாறு தடுப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
மோசடி செய்பவர்களை கைது செய்கின்றமை பற்றி மட்டுமே அவர்கள் தொடர்ந்து கூச்சலிடுகிறார்கள். நாட்டை வளர்ப்பது பற்றி அவர்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது. சுகாதாரத்துறை குழப்பத்தில் உள்ளது. அவற்றை அவர்கள் கவனிக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
