போதைப்பொருளுக்கு விசேட தள்ளுபடி: விற்பனை செய்த தம்பதியினர் கைது
அநுராதபுரம் (Anuradhapura) நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாரியபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவரும், கேகாலை (Kegalle) பகுதியைச் சேர்ந்த 28 வயதான அவரது கணவருமே நேற்று (25) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொசன் போயா காலத்தில் அனுராதபுரத்திற்கு வரும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
முதலாம் ஆண்டு நிறைவு
இது தொடர்பில் தரகர் ஊடாக கிடைத்த தகவலின் பிரகாரம், தம்பதியினர் கைது செய்யப்பட்ட போது, குறித்த பெண்ணிடம் இருந்து 40 கிராம் ஹெரோயினும், அவரது கணவரிடம் இருந்து 80 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த தம்பதியினர் போதைப்பொருள் வியாபாரத்தை ஆரம்பித்து முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் விசேட சலுகையாக போதைப்பொருள் பொதி ஒன்றிற்கு 500 முதல் 1000 ரூபா வரை தள்ளுபடி வழங்கி விற்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |