பிணையில் விடுவிக்கப்பட்ட 24 வயது இளைஞன் - வைத்தியசாலையில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி, மன்னார் சந்தி பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
குறித்த நபர் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (28) அதிகாலை 05 மணியளவில் அவசர பிரிவிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் இளைஞனின் கழுத்து மற்றும் காலில் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது உடனடியாகச் செயல்பட்ட மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை காவல்துறையினர் மற்றும் அனுராதபுரம் காவல்துறை தலைமையகம், மெதவாச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
