அனுரவின் இந்திய விஜயம் : காரணத்தைப் போட்டுடைத்த சந்தோஷ் ஜா
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு, ஏனைய நாடுகளைச்சேர்ந்த முக்கிய நபர்களுக்கு வழமையாக விடுக்கப்படும் அழைப்பைப் போன்றது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அழைப்பானது அசாதாரணமான விடயம் அல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இவ்வருட இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் கடந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்திய விஜயம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இடம்பெற்ற இவ்விஜயத்தின்போது அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் உள்ளடங்கலாக இந்தியாவின் உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அதன்படி குறித்த அழைப்பு தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
அதிபர் தேர்தல்
''அது இலங்கை தலைவர் ஒருவருக்கான வழமைபோன்ற அழைப்பேயாகும். கலாசார தொடர்புகளுக்கான இந்திய ஆணைக்குழுவின் மேன்மைக்குரிய விருந்தினர் செயற்திட்டத்தின்படி ஏனைய நாடுகளின் அரசியல், வர்த்தகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் தலைவர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்படுவார்கள். அத்திட்டத்தின் கீழேயே அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதேவேளை இலங்கையின் அதிபர் தேர்தலில் களமிறங்கவிருக்கும் ஏனைய வேட்பாளர்களும் இந்தியாவிடமிருந்து இத்தகைய அழைப்பை எதிர்பார்ப்பார்கள் அல்லவா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,
"ஏனைய வேட்பாளர்கள் இதற்கு முன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். எனவே அவர்கள் மீண்டும் விஜயம் செய்தாலும், அது இந்தியாவுக்கான அவர்களது முதலாவது விஜயமாக இருக்காது. ஆனால் அவர்கள் வரவிரும்பினால், நாம் அவர்களை எப்போதும் வரவேற்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |