விளக்கமறியலிலுள்ள சட்டத்தரணி உதயங்கனி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Sathangani
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணி பி.உதயங்கனியை (P. Udayangani) உடனடியாக விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (31) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், சட்டத்தரணி விடுதலையான பிறகு ஏப்ரல் 28 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
மனுதாரர் தரப்பில் முன்னிலையான சிரேஷ்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசத்தின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் பைசர் முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவுடன் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸ் முஸ்தபா முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
கடந்த 28 ஆம் திகதி பிணை மனு தொடர்பில் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி உதயங்கனி, நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, பிணையில் விடுவிக்கப்பட்டதாக அறிந்துகொள்ள முடிந்ததாக மனுதாரர் கூறினார்.
இருப்பினும், அன்றைய தினம் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாரியபொல சிறைச்சாலை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ஒரு முறையான நடைமுறை இருப்பதாக மனுதாரர் சுட்டிக்காட்டியதோடு, மேலும் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யும் போது உயர் நீதிமன்ற நீதிபதி அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும் கூறினார்.
அதன்படி, இந்த மனுவை விசாரிக்க அனுமதி அளிக்கவும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுவிக்க வாரியபொல சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கவும் மனுவில் மேலும் கோரப்பட்டது.
இந்தநிலையில் முன்வைக்கப்பட்ட குறித்த சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, பின்னர் இந்த உத்தரவுகளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
