ஞானசாரதேரர் நியமனம் - அச்சத்தில் முஸ்லிம்கள்
“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவிக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(gnanasara thero) நியமிக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் சமய அறிஞர்கள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது.
இதனால் தாங்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவோமோ என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டதை அறிந்து நாம் வியப்படைகிறோம். இந்த தலைப்பு சமீப காலங்களில் பொதுவான தலைப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இலங்கை ஐக்கிய ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் படி, தீவின் அனைத்துப் பிரஜைகளும் பல நூற்றாண்டுகளாக ஒரே தேசம், ஒரே சமுகம் என தங்களின் சொந்த சமய கலாசாரங்களையும் விழுமியங்களையும் பின்பற்றி மத சுதந்திரத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றனர்.
பல்வேறு மதங்களை மதிக்கும் பல மதத் தலைவர்கள் உள்ள நாட்டில், மதத்தை அவமதித்தும், முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் சர்ச்சைக்குரிய நபரை நியமித்திருப்பது எங்களுக்கு கவலையும் அதிருப்தியும் அளிக்கிறது.
இதனால் தாங்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நியமனம் சர்வதேச மட்டத்தில் எமது நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் விடயமாகும்.
எங்கள் தாய்நாட்டிலும் மக்களிலும் அமைதி, ஒற்றுமை, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிலவவும், அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.