கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் துணிச்சல் -கோட்டாபயவுக்கு தக்க பதிலடி
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறிய செய்தியை அரச தலைவரும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ராமண்ணா மகா நிகாயாவின் பிரதமகுரு வண. சோபித தேரர்(Sobhitha Thera) தெரிவித்துள்ளார்.
இதனை மகாநாயக்க தேரர்கள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் சமுக ஆர்வலர்களும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என சோபித தேரர் தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கமானது கேலி, அவமதிப்பு போன்ற பதவிகளையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அரச தலைவர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், தனிப்பட்ட, அரசியல் அல்லது உறவினர் நட்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுகையில் பலர் மௌனமாக இருந்தாலும், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் அந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நண்பர்களை நியமித்ததன் மூலம் முழு நாடும் சீரழிந்துள்ளதாக வண.சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் வேந்தராக நியமிக்கப்பட்ட முத்தெட்டுவ ஆனந்த தேரரிடமிருந்து மாணவர்கள் பட்டத்தை பெறுவதை புறக்கணிப்பது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.