புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்களா?அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் இல்லை என்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வன்னிப் போரின் பின் 12,500 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு செய்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சு வார்த்தையை நடத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் விடுதலைப்புலி சார்ந்தவர்கள் அல்லர். அனைத்து முஸ்லிம் மக்களும் சஹ்ரான் அல்ல. அதேபோல அனைத்து சிங்கள மக்களும் ஞானசார தேரரின் சீடர்களும் இல்லை.
தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் யார்? ஜே.ஆரின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நேராக மக்களை விரட்டினார்கள். அப்பாவி மக்கள் தென்னிலங்கையில் கொலை செய்யப்பட்டார்கள். நான் அன்று என்னுடன் சட்டக்கல்லூரியில் கற்ற 33 தமிழ் மாணவர்களை அங்கு பாதுகாப்பாக மறைத்து வைத்து பம்பலப்பிட்டிய கல்லூரியில் ஒப்படைத்தேன். அவர்களில் 04 பேர் விடுதலைப் புலிகளில் இணைந்து உயிரிழந்தார்கள். விடுதலைப் புலிகளுடன் சேராத பலரும் நாட்டை விட்டுச்சென்றார்கள். அவர்கள் விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவர்கள் அல்லர்.
போரின் பின் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 12,500 பேரை புனர்வாழ்வுக்கு உட்படுத்திய ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் பேச்சுவார்த்தையை எம்மால் நடத்த முடியும் என நம்புகிறோம்.
ஆகவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எடுத்த முடிவானது சிறப்பான தலைவரால் எடுக்கப்பட்டதாகும். அவரது வாக்கு வங்கியைக்கூட நினைக்காமல் தான் இந்த முடிவை எடுத்தார். இந்நிலையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் வெளிநாடுகளில் மக்கள் கூச்சல் எழுப்பியதை சிரித்த முகத்துடன் கூறிய மட்டக்களப்பு அரசியல்வாதி தேசப்பற்று அற்ற அநாதை”
இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படப்போவதாக வெளியிட்ட தகவல் குறித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.