தமிழகத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக நாம் தமிழர்?
தமிழகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு மிகப் பெரும் சக்தியாக ‘நாம் தமிழர் கட்சி’ உருவாகி வருவதை நேற்றைய தினம் வெளியான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தற்பொழுது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தி.மு.க. மற்றும் கடந்த 10 வருடங்களாக ஆட்சிக்கட்டில் இருந்த அ.தி.மு.க. - இந்த இரண்டு கட்சிகளுக்கும் அடுத்ததாக, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள ஒரு கட்சியாக ‘நாம் தமிழர்’ பார்க்கப்படுகின்றது.
நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி நாம் தமிழர் கட்சி 29,58,458 வாக்குகளை பெற்றிருந்தது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 6.85% வீதம். தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து வெறும் ஐந்து வருடங்களில் இப்படியான ஒரு வளர்ச்சியை நாம் தமிழர் பெற்றிருப்பதானது, அகில இந்திய மட்டத்தில் நோக்கர்களை திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
இதில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் என்னவென்றால், தசாப்தகாலமாக தேர்தல் வெற்றிகளைக் குவித்துவருகின்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 19,6578(4.41%), பாட்டாளி மக்கள் கட்சி 17,45,229(4%), மக்கள் நீதி மையம் 10,58, 847(2.45%), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 4, 86, 979(2.45%). (இவைகள் குறைந்த ஆசனங்களில் போட்டியிட்டிருந்தன என்றாலும் இவைகளது தோழமைக் கட்சிகளினது வாக்குகளும் இவற்றிள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது)
1949இல் அண்ணா உருவாக்கிய தி.மு.க இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்பு பெறவே 13 ஆண்டுகள் ஆகியதாகக் கூறப்படுகின்றது.1957 தேர்தலில் மூன்றாம் இடத்தில்தான் தி.மு.க இருந்தது. ஆனால அவ்வாறு 3ஆம் இடத்தில் இருந்த தி.மு.க.வினால் 10 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
இந்த விடயத்தைச் சுட்டிக் காண்பிக்கும் ஆய்வாரள்கள் தி.மு.காவின் வளர்ச்சி வேகத்தைவிட நாம் தமிழரின் வளர்ச்சி வேகம் அதிகமானது என்பதுடன், திராவிடச் சித்தாந்தத்தை கைவிட்ட நிலையில் ‘கழகங்கள்’ தடுமாறிவருகின்ற நிலையில், சித்தாந்த அடிப்படையில் தமிழக்கதில் பலமான நிலைப்பாட்டை கொண்ட ஒரே கட்சியாக நாம் தமிழர் இருப்பதால் இளைஞர்களிடையே நாம் தமிழர் வேகமாக பிரபல்யம் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பினைத் தொடர்ந்து நாம் தமிழ் இயக்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு மே 18 இல் கட்சியாக உருமாற்றம் பெற்ற நாம் தமிழ் கட்சி, 2016ஆம் ஆண்டு தேர்தலில் முதற்தடவையாகப் போட்டியிட்டு வெறும் 45,007 (1.06%) வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார்கள்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 16, 68,079 வாக்குகளைப் பெற்று வளர்ச்சியின் போக்கை வெளிக்காண்பித்த அந்தக் கட்சி 2021ம் ஆண்டு பெற்ற வாக்குகள் என்பது அதன் அசுர வளர்ச்சியின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
இன்றைய நிலையில் ஆட்சியைப் பிடித்துள்ள தி.மு.கவையும், இந்திய நடுவன் அரசில் ஆழும் பாரதிய ஜனதா கட்சியையும் நேரடியாக விமர்த்துவரும் நாம் தமிழ் கட்சி, எதிர்வரும் காலங்களில் சந்திக்க இருக்கும் பல பரிமான சவால்களை எவ்வாறு சந்தித்து வெற்றி காண்பார்கள் என்பதில்தான் அவர்களது எதிர்கால வெற்றி மாத்திரமல்ல, இருப்பும் தங்கியிருக்கின்றது.