சர்வதேசத்தில் அதிகரித்துள்ள ஆயுத மோதல்களின் ஆபத்தான நிலை! சர்வதேசத்துக்கு ஐ.நா அரைகூவல்
இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் அண்மையகாலத்தில் உலகம், அரசுகளுடன் தொடர்புடைய மிக அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்களுக்கு முகங்கொடுத்துவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய உலகளாவிய நிலைவரம் மிக ஆபத்தானதாகவும், கவலை அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் திங்கட்கிழமை (7) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான்
அண்மைய சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் ஆயுதமோதல்களுக்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களின் பிரகாரம் செயற்படாமை மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளின் பிரகாரம் செயற்படுவதற்கான கடப்பாட்டில் ஏற்பட்டுள்ள பலவீனம் என்பன முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாகவும் வோல்கர் டேர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் தற்போது குறைந்தபட்சம் ஒரு அரசையேனும் உள்ளடக்கிய 60 க்கும் மேற்பட்ட மோதல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், அரசுகளுக்கு இடையிலான நேரடி மோதல்களில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு சர்வதேச சமூகத்தை மிக ஆபத்தாக பாதையை நோக்கி நகர்த்திச் செல்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள மோதல்கள் தொடர்பில் கவலை வெளியிட்ட அவர், இந்த மோதல்கள் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் பாதிப்பதாகவும், அனைத்து உலகநாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூகோள அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளைத் தோற்றுவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மோதல்களால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் தவிர்க்கப்படக்கூடியவை என்றும், சம்பந்தப்பட்ட அரசுகள் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நோக்கி உடனடியாகத் திரும்பவேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |