யாழ்ப்பாணத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் - இராணுவத் தளபதி திட்டவட்டம்
தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத வகையில் யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், 1985 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கடமையாற்றிய நான் - கடைசியாக 2014, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கீரிமலை உடுவில் பகுதிகளில் கடமையாற்றியிருந்தேன். அக் காலப்பகுதியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான வீடுகளை பெற்றுக் கொடுப்பதில் பெரும் பங்காற்றியிருந்தேன். அத்தோடு விவசாய மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய பார்த்தீனிய ஒழிப்பில் முக்கிய பங்காற்றியிருந்தேன்.
அதன் பின்னர் வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு தற்போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு ஒரு வாரமாகிறது. எனினும் யாழ் மாவட்டம் தொடர்பாக ஏற்கனவே நான் அறிந்தவன். இங்குள்ள மக்களை நன்கு அறிந்தவன்.
எனவே இங்குள்ள மதத் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் கருத்தின் ஊடாக ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மாவட்டத்தில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவேன்.
எனக்குக் கீழ் பணியாற்றும் சகல இராணுவ வீரர்களும் பொதுமக்களின் சகல சமூக செயற்பாட்டிற்கும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.