மன்னாரில் காவல்துறை மற்றும் இராணுவம் திடீர் சுற்றிவளைப்பு - ஒருவர் கைது அறுவர் தப்பியோட்டம்( படங்கள்)
மன்னார் அடம்பன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை(15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் அடம்பன் காவல்துறையினர் இணைந்து குருவில் வான் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி பொருட்களை இராணுவம் மற்றும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அடம்பன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடம்பன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தப்பியோடிய சந்தேக நபர்கள் 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






