மின்னேரியா தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி நுழைந்த இராணுவ வாகனங்கள்- நீதிமன்றின் உத்தரவு!
ஹபரனை பகுதியில் இராணுவம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை வலுவடைந்தமை தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இராணுவ அதிகாரி ஹபரன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னேரியா தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி நுழைந்த இரண்டு இராணுவ வாகனங்களை ஆய்வு செய்தபோதே இராணுவ சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஏற்பட்ட முறுகல் நிலைமை வலுவடைந்தமையால், இரு தரப்பிலிருந்தும் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரி உள்ளிட்ட ஏனையோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சம்பந்தபட்ட இராணுவ அதிகாரி பொலிஸ்நிலையத்தில் முன்னிலையானதையடுத்து அவரை கெக்கிராவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.