அண்ணனின் வெட்டரிவாள் தாக்குதலில் தம்பியான இராணுவ மேஜர் பலி
மாத்தறை, வல்கம வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவ மேஜர் ஒருவர் தனது மூத்த சகோதரனின் வெட்டுக்கத்தி தாக்குதலுக்கு உள்ளாகி தனது வீட்டிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் கம்புறுபிட்டிய இராணுவ முகாமில் கடமையாற்றிய 39 வயதுடைய ஆயேஷ் சங்க ராஜபக்ச என்ற இராணுவ மேஜர் ஆவார்.
சந்தேகத்தின் பேரில் கைது
கொலை தொடர்பாக மாத்தறை தலைமையக காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் உயிரிழந்த அதிகாரியின் மூத்த சகோதரர் ஆவார். அவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு திரும்பிய ஒரு திருமணமானவர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவத்திற்கு இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட காணி தகராறே காரணம்.
சகோதரனின் தலையில் குத்தி கொலை
நேற்று (17) அதிகாலையில் இந்த தகராறு முற்றிய நிலையில், சந்தேகத்திற்குரிய மூத்த சகோதரர் மேஜர் வசித்து வந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு மீன் வெட்டப் பயன்படுத்தப்படும் வெட்டுக்கத்தியால் தனது சகோதரனின் தலையில் குத்தி இந்தக் கொலையைச் செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது கைதாகியுள்ள சந்தேகத்திற்குரிய மூத்த சகோதரரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் வெட்டுக்கத்தியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |