ருவன்வெலிசாய மோதல்...! கடமையை மறந்த காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
அநுராதபுரம் ருவன்வெலிசாய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பத்துடன் தொடர்புடைய தேரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 25 பேருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க தவறிய அநுராதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, குறித்த காவல்துறை அதிகாரியை எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது பிரதம நீதவானால் நேற்று (17.11.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணம்
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டத்தரணிகள் இந்திக இம்புல்பிட்டிய மற்றும் நுவன் பெல்லந்துடாவ ஆகியோர் முன்வைத்த பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளது.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் குறித்த பிணை மனுவில் உள்ளடக்கப்படவில்லை.
நீதிமன்ற விசாரணையின்போது, மோதலைத் தூண்டியதாகக் கூறப்படும் ராஜாங்கனை சத்தாரத்தன தேரர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்படவில்லை என சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மோதலைத் தடுக்க வாய்ப்பிருந்தும் காவல்துறையினர் அதனைத் தடுக்கத் தவறியதாகவும் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், காணொளிக் காட்சிகளின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தை வழிநடத்துவதில் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |