மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை : இராணுவச்சிப்பாய் கைது
கூலிக்கு மோட்டார் சைக்கிள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த ஆடைத் தொழிற்சாலையின் தரக் கட்டுப்பாட்டாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்தமை மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவர் ஹோமாகம தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவில் கடமையாற்றும் 29 வயதுடைய சந்தேகநபர் ஹோமாகமவில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டு ஹெரோயின் மீட்பு
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு ஒன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன வடக்கு, சமகி மாவத்தையைச் சேர்ந்த 41 வயதுடைய கே.ஏ.டி. ரஜித் தனுஷ்க என்பவராவார். கடந்த 16ஆம் திகதி ஹோமாகம பிட்டிபன கலாகஹேன சிங்க அரண பிரதேசத்தில் இக்குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், சடலம் தொளஹேன பிட்டிபன கலாகஹேன முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள ஏல விற்பனை செய்யப்பட்ட காணியில் உள்ள கால்வாய்க் கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
காவல்துறை விசாரணைகளில், உயிரிழந்தவர் தனது மோட்டார் சைக்கிளில் கடைசியாக மேற்கொண்ட வாடகை பயணத்தின் போது இந்த சந்தேகநபரால் அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள், பணப்பை, ஒரு பவுண் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் மொரகஹஹேன காவல்துறை பிரிவில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இராணுவ வீரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 31ஆம் திகதி வரை தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |