சிறை பிடிக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்கள் - எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு
சிறை பிடிக்கப்படும் போராட்டகாரர்கள்
அதிபரின் ஆசனத்தில் அமர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் போராட்டகாரர்கள் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்படுகின்றமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால், கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆசனம் மற்றும் ஒலிவாங்கிகளை சேதப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “அதிபர் மாளிகையில் ஆசனத்தில் அமர்ந்தார்கள் எனக் கூறி அவர்களை சிறை வைத்துள்ளனர்.
எனினும் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து, அதன் மீது நீரை ஊற்றி, அதனை உடைத்து வீசி இங்கு அழிவை ஏற்படுத்தினார்கள். இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தில் செயற்பட்ட விதம் குறித்து குழுவொன்று அமைக்கப்பட்டது. அதற்கு என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை. எங்கே அந்த அறிக்கை.
எவ்வளவு தவறாக நடந்துகொண்டாலும் தண்டனை விதிக்கப்படுவதில்லை

இந்த நாடாளுமன்றத்தில் எவ்வளவு தவறாக நடந்துகொண்டாலும் எந்தவொரு வகையிலும் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை.
அந்த அறிக்கையை பெறுவதற்கு நாங்கள் விரும்புகின்றோம். நளின் கூறிய விடயம் தொடர்பான அறிக்கை எங்கே? ஏன் அந்த அறிக்கைகளை மூடி மறைக்கின்றீர்கள்” என்றார்.