நாட்டை விட்டு வெளியேறிய நாமல்! தூசுத்தட்டப்படும் வழக்கு தொடர்பில் மனு தாக்கல்
கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இன்று (29.07.2025) ஹம்பாந்தோட்டை (Hambantota) நீதவான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய நேற்று (28.07.2025) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனைக்கு எதிரான போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாக தவறியமை காரணமாக ஹம்பாந்தோட்டை தலைமை நீதிபதி ஓஷதா மகாராச்சியினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையாக தவறியதால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது தனிப்பட்ட தேவை கருதி மாலைதீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
